திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ. 10ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நவ. 10ல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பராசக்தி அம்மன் சண்டிகேஸ்வரர் விழா நடக்கும் 10 நாட்களில் மாட வீதி வலம் வருவர். ஏழாம் நாள் விழாவில் 16ல் பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் 19ல் 2668 அடி உயரமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதை தொடர்ந்து மூன்று நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பம் உற்ஸவம் நடக்கும். இதற்கான விழா ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 3500 கிலோ நெய் ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஆறு அடி உயர ராட்சத கொப்பரையில் 1000 மீட்ட ர் காடா துணியாலான திரி மற்றும் 10 கிலோ கற்பூரம் கொண்டு ஏற்றப்படும். மஹா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும் 40 கி.மீ. துாரம் வரை தெரியும். கொட்டும் மழை பெய்தாலும் நிற்காமல் எரிவது மஹா தீபத்தின் தனிச்சிறப்பு.