பதிவு செய்த நாள்
03
நவ
2021
03:11
மதுரை: விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: தீபாவளியையொட்டி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி, காற்று மாசால் சிறுவர்கள், பெரியவர்கள்,நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழக அரசு மூன்றாண்டுகளாக தீபாவளியன்று காலை 6:00 முதல் 7:00, இரவு 7:00 முதல் 8:00 மணி வரை பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயித்துள்ளது. இந்த நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிகாப்பது ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்தளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி அரசு நிர்ணயித்த நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.