பதிவு செய்த நாள்
06
நவ
2021
09:11
கேதார்நாத் :தீர்த்த யாத்திரை வாயிலாக நம் கலாசாரங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் கலாசார பெருமையையும், தொன்மையையும் உலகமே வியந்து பார்க்கிறது, என, கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார். உத்தரகண்டில் முதல்வர்புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அத்வைத தத்துவத்தை உலகிற்கு போதித்த ஆதிசங்கரரின் சமாதி, இங்குள்ள கேதார்நாத் கோவில் அருகில் அமைந்திருந்தது.
சமாதி சீரமைப்பு: இங்கு, 2013ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் கேதார்நாத் கோவில் சேதமடைந்தது. கோவில் அருகே அமைந்திருந்த ஆதிசங்கரர் சமாதியும் சேதமடைந்தது. இதையடுத்து, 500 கோடி ரூபாய் செலவில் கேதார்நாத் கோவில் மற்றும் ஆதிசங்கரர் சமாதியை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயரமும், 35 டன் எடையும் உடைய ஆதிசங்கரரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலும், ஆதிசங்கரர் சமாதியும் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கேதார்நாத் வந்த பிரதமர் மோடி, ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார்; அப்போது அவர் பேசியதாவது:உத்தரகண்டில் 2013-ல் ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு பின், கேதார்நாத் மீண்டும் சீரமைக்கப்படுமா என மக்கள் நினைத்தனர். ஆனால், கேதார்நாத் மீண்டும் மறுகட்டமைக்கப்படும் என, என்னுள் எழுந்த குரல் ஒன்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தது.டில்லியில் இருந்தபடி கேதார்நாத் மறுசீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்தேன். ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வழியாக இங்கு நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தேன். இப்போது கேதார்நாத் புத்துயிர் பெற்றுள்ளது.
நமக்கு உத்வேகம்: இளைஞர்களை வழிநடத்துவதற்காக மடங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. நம் கலாசாரத்தை கட்டிக் காப்பாற்றும் நோக்கில், நாடு முழுதும் புனிதமான மடங்களை ஆதிசங்கரர் நிறுவினார்.ஷங்கர் என்றால் நன்மை செய்யும் ஒருவர் என அர்த்தம். அந்த அர்த்தத்தை செயல்படுத்திக் காட்டியவர் ஆதிசங்கரர். சமுதாய நன்மைக்காக புதிய குறிக்கோளுடன் செயல்பட்டவர் ஆதிசங்கரர். கடவுள் சிவனின் அவதாரமான அவர், மனித நேயத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆதிசங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகம் தருகின்றன. நம் நாட்டின் பாரம்பரியம் மிக்க வேதங்களை, இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
யாத்திரையால் மகிழ்ச்சி: தீர்த்த யாத்திரை மேற்கொள்வதன் வாயிலாக, நம் கலாசாரங்களை தெரிந்து கொள்ள முடியும். யாத்திரையால் மகிழ்ச்சியுடன், பாரம்பரியமும் கிடைக்கிறது. கேதார்நாத் ஜோதி லிங்கத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் தரிசிக்க வேண்டும். இந்தியாவின் கலாசார பெருமையயும், தொன்மையையும் உலகமே வியந்து பார்க்கிறது.ஆன்மிக தலங்களுடன், இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் தொடர்புடைய இடங்களுக்கும் யாத்திரை செல்ல வேண்டும். இதன் மூலம், இந்தியாவின் உணர்வை நம்மால் அறிந்து கொள்ள முடியும். புத்த மதத்துடன் தொடர்புடைய புத்த கயா உள்ளிட்ட இடங்களை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின், தன் பெருமையை அயோத்தி மீட்டெடுத்துள்ளது.உத்தரகண்ட் மாநிலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்ச்சி பாதையில் செல்கிறது. இந்த நுாற்றாண்டின் நடப்பு 10 ஆண்டுகள், உத்தரகண்ட் மாநிலத்துக்கு உரியது.சார்தம் என அழைக்கப்படும் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு பக்தர்கள் செல்வதற்காக, நெடுஞ்சாலைகளுடன் இந்த தலங்களை இணைக்கும் சார்தம் சாலை திட்டம் விரைவாக நடந்து வருகிறது.
உலகின் குருவாக பாரதம்: இந்த பணி நிறைவு பெற்ற பின், கேதார்நாத்துக்கு பக்தர்கள் கம்பி வட வாகனம் மூலம் வர முடியும்.அது மட்டுமின்றி கடந்த 100 ஆண்டுகளில் கேதார்நாத்துக்கு வந்துள்ள பக்தர்களை விட, அடுத்த ௧௦ ஆண்டுகளில் பல மடங்கு அதிகமாக பக்தர்கள் வருவர்.கேதார்நாத் அருகே உள்ள ஹேமகுண்ட் சாஹிப் குருத்வாராவுக்கும் பக்தர்கள் செல்ல வசதியாக, கம்பி வட பாதை அமைக்கப்பட்டு வருகிறது.வரும் காலங்களில் வேலை தேடி, மலைப்பகுதிகளில் இருந்து மக்கள் நகரங்களுக்கு வருவது குறைக்கப்படும். மலைப்பகுதிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உத்தரகண்ட், ராணுவ வீரர்களின் மாநிலம். நாட்டை பாதுகாக்க பல வீரர்களை இந்த மாநிலம் தந்துள்ளது. ஆதிசங்கரர் போன்ற நம் மகான்கள், ஞானிகள் காட்டிய பாதையில் பயணித்தால், உலகின் குருவாக பாரதம் மீண்டும் ஜொலிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.முன்னதாக கேதார்நாத் கோவிலில் சிவபெருமானை வழிபட்ட பிரதமர் மோடி, சிறப்பு பூஜைகளும் செய்தார்.
காஞ்சிபுரம், ராமேஸ்வரத்தில் நிகழ்ச்சி: கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை, ஆன்லைன் மூலம் நேரலையில் பார்க்க, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் இதை பார்த்தனர். இதையொட்டி, நேற்று காமாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. ஆதிசங்கரர் சிலை திறப்பு நிகழ்ச்சி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நடந்த நிகழ்விலும் பெரிய திரை மூலம் ஒளிபரப்பானது. மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ., பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.