பதிவு செய்த நாள்
06
நவ
2021
04:11
தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகை கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், 5ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தொடர்ச்சியாக இன்று (06ம் தேதி) சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து, தஞ்சாவூர் பெரிய கோவிலிலுக்கு சுற்றுலாப் பயணிகள் காலை முதல், குடும்பம் குடும்பமாக வந்து பெருவுடையார், பெரியநாயகி, வராஹியம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்களின் அழகையும், கட்டிடக்கலையின் பிரம்மிப்பையும் கண்டுகளித்தனர். பெரிய கோவிலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையால், அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து கோவில் பணியாளர்கள் கூறுகையில்; கொரோனா பரவல் குறைந்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த நிலையில், கோவிலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள், கடந்த இரண்டு நாட்களில் அதிகளவில் வருகின்றனர் இவ்வாறு தெரிவித்தனர்.