பதிவு செய்த நாள்
07
நவ
2021
01:11
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், அன்னதானம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும், சிறப்பு பஸ், ரயில்கள் இயக்க அனுமதிஇல்லை, என கலெக்டர் முருகேஷ் கூறினார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணி குறித்து, எஸ்.பி., பவன்குமார் ரெட்டியுடன் ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 10ம் தேதி கொடியேற்றத்தை முன்னிட்டு, காலை 6:00 முதல் 9:00 மணி வரை, சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பின் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படும்.தொடர்ந்து, 16ம் தேதி நடக்கும் மாடவீதி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வலம் வரும். இதையொட்டி அன்று காலை, 6:00 முதல் 9:00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதியில்லை.
மேலும், 17ம் தேதி மதியம் 1:00 முதல் 20ம் தேதி வரை, சுவாமி தரிசனத்துக்கு அனுமதியில்லை. தரிசனத்துக்கு வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேர், உள்ளூர் பக்தர்கள் 3,000 பேர் அனுமதிக்கப் படுவர். அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பஸ், ரயில் இயக்க அனுமதி இல்லை. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவர்.மஹா தீபத்தன்று சுவாமி தரிசனத்திற்கு உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் என 300 முதல் 400 பேர் வரை அனுமதிக்கப் படுவர். மஹா தீபத்தன்று கிரிவலத்துக்கும், மலையேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.வரும் 10ம் தேதி முதல், நகரை ஒட்டிய ஈசான்ய மைதானம், செங்கம் சாலை, காஞ்சி சாலை, திருக்கோவிலுார் சாலை ஆகிய நான்கு இடங்களில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட உள்ளன. வெளியூர் பக்தர்களின் வாகனங்களை இங்கு நிறுத்த வேண்டும். முக்கிய பிரமுகர்கள் அனுமதியில், கடந்தாண்டு நடைமுறை பின்பற்றப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தடுப்பூசி சான்று அவசியம்: கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:சுவாமி தரிசனம் செய்ய வருவோர், கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்று கொண்டு வரவேண்டும். தடுப்பூசி போடாதவர்கள், 24 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்று கட்டாயம் கொண்டு வர வேண்டும். இல்லைஎனில், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.