பதிவு செய்த நாள்
07
நவ
2021
03:11
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பாதையிலுள்ள நீர்வரத்து ஓடைகளை கடக்க 7 இடங்களில் பாலங்கள், 5 இடங்களில் கைப்பிடிகள் அமைக்க அடிப்படை ஆய்வு பணிகளை அறநிலை துறை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்டனர்.
இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து திரும்ப பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எதிர்பாராத மழையால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்படும் போது ஏறவோ, இறங்கவோ முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். எனவே, கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து, பாதுகாப்பான தரிசனத்திற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரி வந்தனர். இந்நிலையில் தாணிப்பாறையில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, பிலாவடி கருப்பசாமி கோயில், வெள்ளைப்பாறை உட்பட ஏழு இடங்களில் பாலங்கள் அமைக்கவும், கோண தலைவாசல், நாவலூத்து, இரட்டை லிங்கம் உட்பட ஐந்து இடங்களில் கைப்பிடிகள் அமைக்கவும் அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது இப்பகுதி புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகளை துவக்க வன பாதுகாப்பு சட்டம், வன உயிரின பாதுகாப்பு சட்டம் ஆகிய 2 பிரிவின் கீழ் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக மத்திய வனத்துறையின் இ-கிரீன் வெப்சைட் மூலம் கோவில் நிர்வாகம் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான வழித்தட ஆய்வுகளை சாப்டூர் வனச்சரக அலுவலர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர் மற்றும் கோவில் ஊழியர்கள் மேற்கொண்டனர்.