கல்பாத்தி தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2021 05:11
பாலக்காடு: பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாலக்காடு கல்பாத்தியில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில், ஐப்பசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழாவின் துவக்கமாக காலை 7:30 மணி அளவில் சிறப்பு பூஜை நடந்தது. 9.45 மணி அளவில் கோவில் தந்திரி பிரபு சேனாபதி தலைமையில் கொடியேற்றம் நடந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காலமானதால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து கொண்டாட்டங்களின்றி கோவில் வளாகத்தினுள் வெறும் சடங்காக மட்டும் விழாவை நடத்தினர். ஆனால் இம்முறை அரசின் கட்டுப்பாடுகள் சில தளர்வுகள் ஏற்படுத்தியதையடுத்து விழாவை நடத்த கோவில் நிர்வாகத்தினர் தீர்மானித்தனர். இதையடுத்து விழா நடத்த அனுமதி கேட்டு கோவில் நிர்வாகம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அரசு, கோவிலினுள் 100 பேரும் வெளியே 200 பேரும் பங்கேற்கும் வகையில் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி விழா நடத்த அனுமதி அளித்தன. வரும் 14, 15,16 தேதிகளில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. பெரிய தேர்களில் அமர்ந்து முலவர் வீதி உலா வரும் நிகழ்ச்சி இம்முறையில் நடக்காது. இவ்வைபவம் பல்லக்குகளிலும் சிறு தேர்களிலுமாக நடைபெறும். தேர் திருவிழாவை முன்னிட்டு, நடக்கும் சங்கீத உற்சவம் இம்முறை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து ரத்து செய்துள்ளன. வரும் 14ம் தேதி வரை மாலையில் மூலவர்கள் எழுந்தருளல் உட்பட உள்ள நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.