பதிவு செய்த நாள்
10
நவ
2021
02:11
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இந்தாண்டு சூரசம்ஹார வைபவம் நடத்தப்படவில்லை. இன்று திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. கந்த சஷ்டி என்பது முருகப்பெருமான், சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்து, அரவணைத்துக்கொண்ட நாள் . இது சைவ சமயத்தவர்கள் பெருமையுடன் கொண்டாடும் ஒரு விழா . கனமழை காரணமாக, ஒரு சில கோவில்களில் மட்டுமே விழா நடத்தப்பட்டது. சில கோவில்களில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடந்தது. பிராட்வே கந்தக்கோட்டத்தில் நேற்று மாலை சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப்பெருமான் படை சூழ, யானை , சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்த போது, சேவல் , மயிலாக மாறிய காட்சி நடந்தது. இந்த வைபவத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சில கோவில்களில் நட்சத்திரப்படி, இன்று சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணி முன்னிட்டு, பாலாலய பிரதிஷ்டைசெய்யப்பட்டதால் , இன்று சூரசம்ஹார வைபவம் நடத்தப்படவில்லை. இருப்பினும், இன்று காலை 6:00 மணி நடைதிறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு, அபிஷேக அலங்காரங்கள் நடத்தப்படுகின்றன. இரவு வரை முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி, இன்று சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது. பெசன்ட் நகர் அறுபடை வீடுமுருகன் கோவில், குன்றத்துார் முருகன் கோவிலில் உள்ளிட்ட கோவில்களில் இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.