பதிவு செய்த நாள்
14
நவ
2021
01:11
பல்லடம்: பல்லடம் அருகே, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், குரு பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டது.
நவகிரகங்கள் ஒருவரான குரு பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை, குரு பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு, குரு பெயர்ச்சி விழா, சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம், வாஸ்து சாந்தி, விநாயகர் வேள்வி, மகாலட்சுமி பூஜை, முதல் கால வேள்வி உள்ளிட்டவற்றுடன் விழா துவங்கியது. நேற்று, காலை, இரண்டு, மற்றும் மூன்றாம் கால வேள்வி, குரு பகவான் மூல மந்திர வேள்வி ஆகியவை நடந்தன. காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள், வேள்வி பூஜைகளை துவங்கி வைத்தார். மாலை, 6.20க்கு குரு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, குரு பகவான் யானை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 1008 தீர்த்த கலச அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. இரவு, 8.00 மணிக்கு குரு பகவான் திருவீதி உலா, திருமஞ்சனம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தம்பதி சமேதராக சிவபெருமான் அருள்பாலித்தார். இன்று, நான்காம் கால வேள்வி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. அ.கலையமுத்தூர், கல்யாணி அம்மன் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் நவகிரகங்களில் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை தீபாராதனை செய்யப்பட்டது.