பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
11:07
ராசிபுரம்: சிவானந்தா சாலை, வ.உ.சி., நகர் சித்தி விநாயகர் கோவிலில், ஜூலை 8ம் தேதி கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடக்கிறது. ராசிபுரம், சிவானந்தா சாலை வ.உ.சி., நகரில், பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விஷ்ணு, துர்க்கை, நவக்கிரஹ சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் விமான கோபுரம் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், ஜூலை 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு ஜூலை 6ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. அன்று, கணபதி பூஜை, நவகிரஹ ஹோமம், பூர்ணாகுதி, தீபாரதனையும், மாலை 5 மணிக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், முளைப்பாரி அழைத்தல், யஜமான சங்கல்பம், புண்யாகம் வாஸ்த்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல்கால யாகவேள்வி நடக்கிறது. ஜூலை 7ம் தேதி காலை 8 மணிக்கு, வேத பாராயணம், விஷேச சாந்தி, பூதசுத்தி, மாலை 5 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், ஸ்வாமி கண் திறப்பு, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை 8ம் தேதி காலை 6 மணிக்கு புண்யாகம், விநாயகர் பூஜையும் நடக்கிறது. காலை 8 மணிக்கு விமான கோபுரம் மற்றும் விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஸ்வாமி தரிசனமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.