பதிவு செய்த நாள்
03
ஜூலை
2012
10:07
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருகல்யாண மகோத்ஸவம் நேற்று மாலை நடந்தது. பெரிய கோவிலில் உள்ள சொக்கநாதர் சன்னிதியில் இருந்து 4.30 மணிக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னிதி வந்தடைந்தது. இதில், பழங்கள், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்யம், வளையல் சீப்பு, குங்கும சிமிழ், கண்ணாடி, ரிப்பன், ஸ்வீட், புஷ்பம், வெற்றிலை சீவல், ஜாக்கெட் பிட் உட்பட அனைத்துவகையான பொருட்களும் ஊர்வாலமாக எடுத்து வரப்பட்டது. அதை தொடர்ந்து 5.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் துவங்கி இரவு எட்டு மணிக்குள் மாங்கல்யம் சாத்தும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்த திருக்கல்யாணத்தினால் திருமண தடை, ஸ்ர்பதோஷம், கால ஸ்ர்பதோஷம், களத்திர தோஷம், மாங்கய தோஷம், புத்திரதோஷம், நீண்ட ஆயுள், ஞான வைராக்கியம், சகல ரோகம், நிவர்த்தி, சகல ஐஸ்வர்யும் பெறுவது, நவக்கிரகங்களிடம் இருந்து நிவர்த்தி, தொழில் மற்றும் சகல காரியங்களிலும் ஜெயம் பெற மேன்மேலுமும் முன்னேற்றங்கள் அடைய, தீர்க்க ஆயுளுடன் வாழ்வது உட்பட அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகமாகும். திருக்கல்யாண வைபவங்கள் ஞானமணி குருக்கள் தலைமையில் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் அரவிந்தன், மேற்பார்வையார் ரெங்கராஜன் உட்பட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.