பதிவு செய்த நாள்
22
நவ
2021
03:11
பல்லடம்: பல்லடம் அருகே, கேத்தனூர் பகுதியில் உள்ள நடுகல் ஒன்று, நாயக்கர்களின் வீர வரலாற்றை பறைசாற்றி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கேத்தனூர் - காமநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில், நடுகல் ஒன்று முட்புதர்களுக்கு மத்தியில் கேட்பாரற்று உள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் மூலம், இந்த நடுகல்லின் சிறப்பு தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து வரலாற்று ஆர்வலர் பாண்டியன் கூறியதாவது: கேத்தனூரில் உள்ள நடுகல்லானது வீரக்கல் என்று கூறப்படுகிறது. 17ம் நூற்றாண்டு வகையை சேர்ந்த இக்கல், கம்பள நாயக்கர்களின் வீர வரலாற்றை பறைசாற்றுகின்றது. இதை மாலக்கோவில் என்றும் வழிபாடு செய்கின்றனர். இது நம் முன்னோர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதில், கால்நடையுடன் வீரர்கள், வீரப்பெண்மணிகள் உள்ளிட்ட சிற்பங்கள் என, கம்பள நாயக்கர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. இன்றும், இப்பகுதியை சேர்ந்த சிலர் இந்த நடுகல்லை வழிபட்டு, விளக்கேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகல் குறித்தும், நம் முன்னோர்களின் வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். இதனுடன் இருந்து மண் பொம்மைகள் சேதம் அடைந்து விட்டன. புதர்களுக்கு மத்தியில் நடுகல் மூடிக்கிடப்பது கவலை அளிக்கிறது என்றார்.