பதிவு செய்த நாள்
22
நவ
2021
03:11
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம், வட்டமலைக்கரை அணைக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் பொதுமக்கள் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். கடந்த மூன்றாண்டுகளாக தீப வழிபாடு செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைக் கரைஅணைக்கு மட்டும் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
வட்டமலை கரை அணை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு 1.80 கோடி செலவில் 650 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாகும். தாசவநாயக்கன்பட்டி, லக்கம நாயக்கன்பட்டி, குமரபாளையம் , வடக்கு வலசு, புதுப்பை, உத்தமபாளையம் அரியாண்டிவலசு, கணபதி பாளையம், முத்துநாயக்கன்வலசு உட்பட 35 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் 6,043 ஏக்கர் பரப்பளவு இடது, வலது கால்வாய் மூலம் பாசன வசதி பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைக் கரைஅணைக்கு நீர் நிரம்பாமல் உள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்து அமராவதி ஆற்று உபரி நீர் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு உபரிநீர் ஆகியவற்றை வாய்க்கால் மூலமாகவோ அல்லது நீருந்து மோட்டார் மூலமாகவும் வட்டமலை அணைக்கு தண்ணீர் கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமென விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.