பதிவு செய்த நாள்
23
நவ
2021
05:11
ஹோய்சாள மன்னர்கள் கட்டிய கோயில்களில் கர்நாடக மாநிலம் ஹளபேடுவிலுள்ள ஹோய்சாளேஸ்வரர் கோயில் மிகப் பெரியது. சிவபெருமானுக்கு இக்கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் உள்ளன. அவை இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர், அவரது மனைவியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. பக்தர்கள் ராஜா சிவன், ராணி சிவன் என்றே குறிப்பிடுகின்றனர்.
பகவான் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகையைச் சேர்ந்தவர்கள் என ஹோய்சாளர்கள் தங்களைக் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இவர்கள் சமண மதத்தை பின்பற்றினர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு மீண்டும் தாய்மதமான ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்டனர். சிவன், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நுாற்றாண்டில் ஹோய்சாளர்களின் தலைநகராக ஹளபேடு இருந்தது. இங்கு ஒரு சிவன் கோயிலை எழுப்பி மூலவருக்கு தங்கள் வம்சத்தின் பெயரால் ஹோய்சாளேஸ்வரர் எனப் பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டுமான பணி 1207ல் நிறைவு பெற்றது. மன்னர் விஷ்ணுவர்த்தனின் அமைச்சர் கெட்டுமல்லா தலைமையில் இப்பணி நடந்தது.
கோயிலின் வாசலில் விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேல் இரு கைகளில் பாசம், அங்குசம் உள்ளன. வலதுகை அந்நியப் படையெடுப்பில் (மாலிக்காபூர் படையெடுப்பு) உடைக்கப்பட்டது. இடதுகையில் மோதகம் உள்ளது. விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டும் மடித்த நிலையில் உள்ளன. கழுத்தில் இருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே கிடக்கிறது. வெயிலுகந்த விநாயகராக இவர் வெட்டவெளியில் காட்சியளிக்கிறார்.
கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் உள்ளன. முதல் சன்னதியில் ஹோய்சாளேஸ்வரர் என்னும் பெயருடன் சிவன் வீற்றிருக்கிறார். எளிமையாக காட்சி தரும் லிங்கத்தின் மீது பாம்பு குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரண்டு கண்கள் அழகு செய்கின்றன. சன்னதி முன்புள்ள நவரங்க மண்டபம் கலைநயம் மிக்கது. ஹோய்சாள மன்னரான விஷ்ணுவர்த்தனனின் மனைவி சாந்தளாதேவி பெயரால் சாந்தளேஸ்வரர் சன்னதி உள்ளது. வடநாட்டுப்பாணியில் சுவாமி மீது தண்ணீ்ர் வடியும் தாராபாத்திரம் உள்ளது.
இரு சன்னதிக்கும் கிழக்கில் வாசல் இருந்தாலும், வடக்கு, தெற்காகவும் வாசல்கள் உள்ளன. கோயிலை ஒட்டியே அரண்மனை இருந்ததாகச் சொல்கின்றனர். சாந்தளேஸ்வரர் சன்னதியில் பிரசாதமாக தீர்த்தம் தரப்படுகிறது. இங்கு தான் உற்ஸவர் சிவன், பார்வதி உள்ளனர். மகாகாளர், நந்தி என்னும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள் திரிசூலம், உடுக்கை ஏந்தி சிவபெருமானைப் போலவே காட்சியளிக்கின்றனர்.
ஹோய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் சன்னதிக்கு எதிரில் நந்தி மண்டபங்கள் உள்ளன. மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு போல கலைநயம் மிக்க துாண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல் நந்தி நடுவில் உள்ளது. இரண்டு நந்திகளும் பார்ப்பதற்கு ஒன்று போலவே உள்ளன.
பிரகார சுவர் முழுவதும் யானை, சிங்கம், குதிரைவீரர்கள், பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் தேரைப் போலவும், அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர், கோவர்த்தனகிரியைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர், ராம லட்சுமணர், அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என ராமாயணம், மகாபாரதச் சிற்பங்கள் புகழ் மிக்கவை. இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் கோயிலைச் சுற்றி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 120 கி.மீ., தொலைவில் ஹாசன். அங்கிருந்து 39 கி.மீ.,
விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகையன்று தேர், மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்