சுவாமியை தேரில் வைத்து ஊர்வலம் வருவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் பக்தனுக்கு மரியாதை தரும் விதத்தில் தேரோடும் கோயிலைப் பார்த்திருக்கிறீர்களா? நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரியிலுள்ள வேதராஜப் பெருமாள் கோயிலில் மகாவிஷ்ணுவின் பக்தரான திருமங்கையாழ்வாருக்கு திருக்கார்த்திகையன்று தேரோட்டம் நடக்கிறது. கிருதயுகத்தில் பிரம்மாவின் மகனான பிரஜாபதி இங்கு மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அவருக்கு தரிசனம் அளிக்காமல் மகாவிஷ்ணு தாமதம் செய்தார். பக்தனுக்கு தரிசனம் தராததால் கோபம் கொண்ட மகாலட்சுமி அவரைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்தாள். மகாலட்சுமியைத் தேடி இங்கு வந்த மகாவிஷ்ணு, இங்குள்ள குளத்தில் தாமரை மலர் மீது வீற்றிருப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் மகாலட்சுமியை தழுவிக் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு மகாலட்சுமியை தழுவிய கோலத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். மகாலட்சுமியின் வேண்டுகோளின்படி பிரஜாபதிக்கும் காட்சியளித்த போது அவர் தனக்கு மோட்சம் தரும்படி வேண்டினார். கலியுகத்தில் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். அதன்படி கலியுகத்தில் நீலன் என்னும் பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிரஜாபதி பிறந்தார். குமுதவல்லி நாச்சியார் என்னும் பக்தையை திருமணம் புரிய விரும்பினார். “ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் திருமால் அடியவர்களுக்கு அன்னதானம் செய்தால் திருமணம் புரிய சம்மதிப்பேன்’ என்று அவள் நிபந்தனை விதித்தாள். அன்னதானத்திற்கு பணம் இல்லாததால் நீலன் வழிப்பறியில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் இத்தலத்திற்கு அருகிலுள்ள தேவராஜபுரம் என்னும் இடத்திற்கு வந்த போது நீலன் வழிமறித்தார். அப்போது நீலனின் காதில் ‛ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை உபதேசம் செய்து அடியவராக மகாவிஷ்ணு ஆட்கொண்டார். அதன்பின் ‘திருமங்கையாழ்வார்’ என நீலன் பெயர் பெற்றார். பல திவ்யதேசங்களுக்குச் சென்று பாசுரம் பாடத் தொடங்கினார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள திருவாலிக்கும் இதே தல வரலாறு கூறப்படுவதால், இரண்டு கோயில்களையும் இணைத்து திருவாலி திருநகரி என்றே குறிப்பிடுவர். மூலவர் வேதராஜப்பெருமாள் மேற்கு நோக்கியபடி இருக்கிறார். உற்ஸவர் திருநாமம் கல்யாண ரங்கநாதன். அமிர்தவல்லித்தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். தீர்த்தம் லக்ஷ புஷ்கரிணி எனப்படுகிறது. திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் திருமங்கையாழ்வார் தனி சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு மரியாதை தரும் விதமாக தனி கொடிமரம் உள்ளது. திருமங்கையாழ்வாரின் திருநட்சத்திர வைபவம் திருகார்த்திகையன்று நவ.19ல் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7:00 மணிக்கு குமுதவல்லியுடன், ஆழ்வார் தேரில் எழுந்தருளி பவனி வருவார். மதியம் 3:00 மணிக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடக்கும். இரவு 10:00 மணிக்கு சாற்றுமுறையாக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் பாசுரங்கள் பாடுவர். எப்படி செல்வது: சீர்காழி – பூம்புகார் சாலையில் 11 கி.மீ., விசேஷ நாள்: வைகாசி சுவாதி திருவிழா, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம், தை 12 கருடசேவை நேரம்: காலை 7:30 - பகல் 11:30, மாலை 4:30 - இரவு 9:30 மணி தொடர்புக்கு: 94433 72567 அருகிலுள்ள தலம்: பத்ரிநாராயணர் மணிமாடக்கோவில் திருநாங்கூர் (7 கி.மீ.,)