பதிவு செய்த நாள்
24
நவ
2021
03:11
உத்தர கன்னடா : உத்தர கன்னடாவின் பட்கல்லில் அரபி கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருடேஸ்வரா கோவிலின் சிவன் விக்ரஹம் தலை துண்டிக்கப்பட்டுள்ள படம் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதால் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம், பட்கல்லில் அரபி கடற்கரையில் முருடேஸ்வரா சிவன் கோவில் அமைந்துள்ளது. சிவன் அமர்ந்த நிலையிலும், முகப்பு வாயிலில் பிரமாண்டமான கோபுரமும் அமைந்துள்ளது. கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கோவா, கேரளா, மஹாராஷ்டிரா, ஆந்திரா என நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்
.இந்நிலையில், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா வனப்பகுதியில் அடிக்கடி மர்ம நபர்கள் சாட்டிலைட் போன்கள் பயன்படுத்துவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.தேசிய புலனாய்வு படையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தி வாய்ஸ் ஆப் ஹிந்த் என்ற பத்திரிகையில் முருடேஸ்வரா கோவில் இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சிவன் விக்ரஹத்தின் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் சேதப்படுத்தப்பட்ட படம் இடம் பெற்றுள்ளது. இப்படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதை கவனித்த உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம், கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுள்ளது. ஒரு வேளை கோவிலுக்கு பாதிப்பு ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்ற அச்சம் எழுந்துள்ளது.தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் நாயக் நேற்று கோவிலுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், இது குறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவிடம் பேசியுள்ளேன். கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, என்றார்.