பதிவு செய்த நாள்
25
நவ
2021
11:11
மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயிலில் 67 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறை திறக்கப்பட்டு உலோகத்தாலான ஒன்றரை அடி உயர சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு மன்னர் மாறவர்ம சுந்தரபாண்டியனால் மலை மீது கட்டப்பட்டது.மகாமண்டபத்தில் நந்தி அருகே பாதாள அறை உள்ளது. 2 கல் பலகைகளாலும் வெளிப்புறம் கேட் அமைத்தும் 67 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது. திருப்பணி நடக்க உள்ளதால் பாதாள அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று ஹிந்து அறநிலையத்துறை உதவிகமிஷனர் விஜயன், டி.எஸ்.பி., பிரபாகரன் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் அம்பாள், விநாயகர், பீடத்தில் சுவாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் சிலைகள், 21 வகையான பூஜை பொருட்கள் மீட்கப்பட்டன. இவை ஐம்பொன்னாலானதா அல்லது பித்தளையா என ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு மீண்டும் சுவாமி புறப்பாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரி வாணி மகேஸ்வரி, சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி, பாலாஜி உடனிருந்தனர்.