அன்னூர்: குப்பேபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
குப்பேபாளையத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது, இக்கோவிலில், புதிதாக திருச்சுற்று மண்டபம் கட்டப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, 22ம் தேதி விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இரவு முதற்கால வேள்வி பூஜை நடந்தது. 23ம் தேதி மதியம் கலசங்கள் நிறுவுதல், இரவு எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கோவில் கோபுரம் மற்றும் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பேரூராதீனம், சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பழனி சண்முக அடிகள் அருளுரை வழங்கினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர், பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் வேள்வி பூஜைகளை செய்தனர்.