பதிவு செய்த நாள்
26
நவ
2021
12:11
வேலுார்: வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 15 நாட்களாக தண்ணீர் வடியாமல் இருப்பதால், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
வேலுாரில்
பெய்து வரும் தொடர் மழைக்கு, கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 15
நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல், ஊழியர்கள்
திணறுகின்றனர். முழங்கால் அளவு நீரில் பக்தர்கள் நடந்து
செல்கின்றனர்.கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நேற்று கோவிலை பார்வையிட்டு,
அதிகப்படியான நீரை மோட்டார் வைத்து வெளியேற்ற உத்தரவிட்டார். பொதுப்பணித்
துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவிலில் உள்ள மூலவருக்கு அடியில் குளம்
உள்ளது. ஜலத்தில் நிற்பதால், ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் உள்ளது. குளத்தில்
எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக, கோட்டையை சுற்றிலும் அகழி
அமைத்து, குளத்திற்கு தண்ணீர் செல்லும் வசதியை, கோவில் கட்டும் போதே
செய்துள்ளனர். குளத்தில் அதிகளவு தண்ணீர் சேர்ந்து கோவில் மூழ்காமலிருக்க,
உபரி நீர் அகழி குளத்தில் இருந்து சேண்பாக்கம் பாலாற்றுக்கு வெளியேற்றும்
வசதியும் அப்போதே செய்துள்ளனர். தற்போது கோவில் குளத்திலிருந்து,
பாலாற்றுக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு செய்யப் பட்டதால், அகழியில் சிறிது
தண்ணீர் மட்டம் உயர்ந்தாலும், கோவிலுக்குள் சென்று விடுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாலாற்றுக்கு செல்லும் வழியை கண்டுபிடிப்பது தான்
நிரந்தர தீர்வாக அமையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.