பதிவு செய்த நாள்
26
நவ
2021
05:11
பல்லடம்: முறைகேடுகளை தவிர்க்க, கோவில் பெயரில் நில வகைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு, பல லட்சம் ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணியில், தற்போது அறநிலையத் துறை ஈடுபட்டுள்ளது. இருந்தும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அரசு புறம்போக்கு நிலம் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே முறைகேடுகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தன்னார்வர் ஒருவர் கூறுகையில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் தான் பெரும்பாலும் கோவில்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக, அரசு ஆவணங்களில், கோவில்கள் அமைந்துள்ளன நிலம் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆக்கிரமிப்பாளர்களை தடுக்க இயலாத நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. இதை மாற்றி, கோவில் அமைந்துள்ள நிலங்களை, கோவில் பெயரிலோ, அல்லது கோவில் புறம்போக்கு நிலம் என்ற பெயரிலோ வகை மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் கோவில் நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்படுவதை தவிர்க்க முடியும். மேலும், எதிர்காலத்தில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும் இது உதவும். எனவே, கோவில் அமைவிடம் உள்ள நிலங்களை கோவில் பெயருக்கு மாற்ற, சட்ட விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.