தென்தாமரைகுளம்: பொற்றையடி அருகே உள்ள அரசம்பதியில் திருஏடுவாசிப்பு விழா கடந்த 12-ம் தேதி துவங்கி 17 நாட்கள் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று, பட்டாபிஷேக திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சரவிளக்கு பணிவிடையும், சாமிதோப்பில் உள்ள முத்திரி கிணற்றிலிருந்து முத்திரி பதம் எடுத்து, பெண்கள் சுருள் ஏந்தி தலைமைப்பதி வடக்கு வாசலில் இருந்து முத்திரிபதம் மற்றும் சந்தன குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு அரசம்பதி நிர்வாகி சிவச்சந்திரன் தலைமை வகித்தார். ஊர்வலம் கரூம்பாட்டூர் வழியாக அரசம்பதி வந்தடைந்தது. அங்கு உச்சிப்படிப்பு நடந்தது. தொடர்ந்து சமபந்தியும், பட்டாபிஷேகதிரு ஏடு வாசிப்பும், அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி பவனி, அன்னதானம், அருளிசை வழிபாடும், சான்றோர் குலமங்கையர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு பால் வைத்து பணிவிடை செய்தலும் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.