பதிவு செய்த நாள்
30
நவ
2021
02:11
பசவனகுடி-வரலாற்று பிரசித்தி பெற்ற பெங்களூரு பசவனகுடி கடலைக்காய் திருவிழா கோலாகலத்துடன் நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.கர்நாடக ஹிந்து அறநிலைய துறை மற்றும் பெங்களூரு மாநகராட்சி இணைந்து, ஆண்டுதோறும் வரலாற்று பிரசித்தி பெற்ற பெங்களூரு பசவனகுடியில், கன்னட கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை அன்று கடலைக்காய் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில், பசவனகுடி தொட்ட கணபதி கோவிலின் நந்திக்கு கடலைக்காய் அபிஷேகம் செய்வதன் மூலம், 2021ம் ஆண்டின் மூன்று நாட்களுக்கான கடலைக்காய் திருவிழா நேற்று துவங்கியது.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ரவிசுப்பிரமணியா, உதய் கருடாச்சார் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தார். மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், தலைமை கமிஷனர் கவரவ் குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.கர்நாடகாவின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா என பல பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள், கோவில் சுற்று வட்டார சாலைகளில் கடலைக்காய் விற்கின்றனர்.விதவிதமான கடலைக்காய்கள் விற்பதால் பெங்களூரு நகரின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ருசியான திண்பண்டங்களும் விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன.மூன்று நாட்களில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாகன நெரிசல் கட்டுப்படுத்த, டிசம்பர் 1 வரை திருவிழா நடக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
52 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி கிடா வெட்டி பூஜை செய்த மக்கள்
திருவண்ணாமலை :போளூர் அருகே 52 ஆண்டுகளுக்கு பின் சோத்துகன்னி ஏரி நிரம்பியதால் மகிழச்சி அடைந்த மக்கள், கிடா வெட்டி பூஜை செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கன மழையால் அங்குள்ள 106 ஏரிகளில், 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. சோத்துக்கன்னி ஏரி முழுமையாக நிரம்பி நேற்று மறுகால் போனது. 52 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 1969ம் ஆண்டுக்கு பின் இந்த ஏரி நிரம்பியுள்ளது. இதையடுத்து, கிராம மக்கள் மேளதாளத்துடன் ஏரிக்கு சென்று, கிடா வெட்டி பூஜை செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. 2006ல் நிரம்பிய ஏரி, தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி உள்ளது. அதை கொண்டாடும் வகையில் களரம்பட்டி மற்றும் அம்மாபாளையம் கிராம மக்கள் நேற்று ஏரியில் திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, பொதுமக்கள் குத்தாட்டம் போட்டனர். ஏரியில் மலர்கள் துாவப்பட்டன. பட்டாசு வெடித்து, பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.