பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
10:07
நகரி: திருமலையில், வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ள பகுதிகளில், பூமியின் உறுதி தன்மை குறித்து, நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், 450 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் நிர்மாணிக்கப்பட்ட ராஜகோபுரம், கடந்த, 2010ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதையடுத்து, திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் கோபுரம் மற்றும் கட்டடங்களின் உறுதி தன்மையை, ஆய்வு செய்ய, மாநில அரசின் ஆலோசனைப்படி, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், சென்னை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமலைக்கு வந்து, ஒன்பது இடங்களில், இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை (போர்) போட்டு, பூமியின் உறுதிதன்மையை பரிசோதனை செய்தனர். இதேபோல், பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் கழக நிபுணர் குழுவினரும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், திருமலை கோவிலை அதிநவீன தொழில்நுட்ப கருவிகளுடன், ஸ்கேனிங் செய்து, அதன் மூலம், பூமியில் உள்ள நிறை, குறைகளை துல்லியமாக கணிக்க நிபுணர் குழுவினர் முடிவு செய்தனர். நேற்று முன் தினம் திருமலையில், ஸ்கேனிங் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. "இந்த நிபுணர் குழுவினர் அளிக்கும் ஆய்வு அறிக்கையின்படி, திருமலை கோவிலின் பாதுகாப்பு, உறுதி தன்மை குறித்து, திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்தார்.