பதிவு செய்த நாள்
04
டிச
2021
12:12
அண்மையில் பொங்கல் இலவச பொருட்கள் பையின் மாதிரியை வெளியிட்டு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது தமிழக அரசு. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழ் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றினார். அதே போன்று இந்த பையிலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்டிருந்தது விவாதங்களை துவக்கி வைத்துள்ளது.
தமிழர்களின் புத்தாண்டு எது. சமீப கால அரசியலில் புத்தாண்டு எப்படி எதன் அடிப்படையில் இருந்து மாற்றப்பட்டது என்பதை சான்றுகளுடன் விளக்கி உள்ளார் தமிழ் ஆர்வலரான பா. இந்துவன். இது குறித்து அவர் கூறியிருப்பது: முதலாவதாக தையில் தான் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்களா என்ற கேள்விக்கு தரப்படும் முதல் சான்று பாரதிதாசனின் ஒரு கவிதை."நித்திரையில் இருக்கும் தமிழா, சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”-இதுதான் அந்த கவிதைஆனால் அதே பாரதிதாசன் திங்கள் பன்னிரண்டு என்கிற கவிதையில்," சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி ஒத்து வரும் தை மாசி பங்குனி எல்லாம்- இவை ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர் " - என்கிறார்.இந்த கவிதையை ஏன் அவர் சித்திரையிலிருந்து ஆரம்பிக்கிறார் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.
இரண்டாவது சான்றாக வைக்கப்படுவது மறைமலை அடிகள் மற்றும் 400 புலவர்கள் சேர்ந்து தான் தையில் புத்தாண்டு என்று அறிவித்தனர் என்பது. இதையும் கொஞ்சம் அலசலாம்.1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழறிஞர்கள் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டதாக கூறுகின்றனர். அதே மறைமலை அடிகள் தலைமையில் மீண்டும் 18.11.1935ல் சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் திருவள்ளுவரும் திருக்குறளும் என்ற தலைப்பில் ஒரு மாநாடு நடந்தது. இதில் திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், பல தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர்.....!
பழமையில்லா கல்வெட்டு: அதில் தான் திருவள்ளுவர் கி.மு., 31, வைகாசி அனுஷத்தில் பிறந்தார் என்றும், இதையொட்டிய ஒரு தொடராண்டும் அறிவித்தனர். இது 1955ல் வெளிவந்த திருவள்ளுவர் திருநாள் மலர் என்னும் நுாலில் வெளியாகியுள்ளது. ஆனால் அப்போது தமிழ் புத்தாண்டு சித்திரையா, தையா என்ற விவாதம் நடந்ததாக எந்த குறிப்புகளும் இல்லை.
தையில் புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பான அரசாணை வந்தது 1971 தான். ஒருவேளை மறைமலை அடிகள் அடங்கிய அறிஞர்கள் குழு அம்முடிவை எடுத்திருந்தால் அவர்களே தையை புத்தாண்டாக கொண்டாடி இருப்பர். அப்படி எந்த ஆதாரமும் இல்லை.மூன்றாவதாக ஒரு சிலர் பழங்கால கல்வெட்டு என்று ஒன்றைக் காட்டி அதில் தை மாதமே முதல் மாதமாக குறிப்பிட்டிருப்பதாகவும் ஆதலால் பண்டையத் தமிழர் தை மாதத்தையே முதல் மாதமாக கொண்டிருந்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.முதலில் அந்த கல்வெட்டு எவ்வளவு பழமையானது என்பது பற்றி பார்த்தால் 300 ஆண்டுகள் பழமையானது என்ற கட்டுரையைத்தவிர வேறு எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும் அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களும், தற்காலத் தமிழ் எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களுமே ஆகும். தமிழி எழுத்துக்களோ, வட்டெழுத்துக்களோ கூட இல்லை.
மேலும் அந்தக் கல்வெட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி தெளிவாக விளங்கவில்லை, அதனுடன் வந்த செய்திக் கட்டுரை சொல்வதையே நாம் உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.ஒருவேளை அதில் தை மாதம் முதல் மாதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். ஏனெனில் தைத்திங்கள் முதல் நாள் என்பது அறுவடைத்திருநாள். அன்றிலிருந்து வியாபாரத்தை தொடங்குவதால் தை முதல் நாளை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக கொண்டிருக்கலாம். ஏப்ரல் 1-ஆம் தேதியை வர்த்தக ஆண்டு என்பது போன்று.
எப்படி கணக்கிடுவது: ஒருவேளை இந்த விளக்கங்களை ஏற்காமல் "தை ஒன்றே வருடப்பிறப்பு" என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி. 12 மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் எப்போது வரும் என்று எப்படி கணிப்பீர்கள். சூரியன் மகர ராசியில் நுழையும் நாளை வைத்துத் தானே. பஞ்சாங்கத்தையும், நம் பழங்கால வானிலை முறையையும் வைத்துத் தான் முடிவெடுக்க முடியும். அந்த முறையில் மகர ராசி பத்தாம் ராசி அல்லவா. ஆக, அறுவடை தொழில் கணக்கு வழக்குகளுக்கான முதல் நாளாக, வர்த்தக வருடத்தின் முதல் நாளாக கருதப்பட்டதற்கான வாய்ப்பு உண்டு. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற அடிப்படையில் தையை முதன்மைப்படுத்தி அந்த கல்வெட்டு உருவாக்கப்பட்டிருக்கலாம்.ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தை கணிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
மற்ற மாநிலங்களில்....: சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது....!ஆகவேதான் கேரளா, மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன. அது மட்டுமல்ல, நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன...! மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரல் மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தன.
சங்கம் சொல்வது என்ன: சங்க காலத்தில் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை. ஆனால் சித்திரையை முதன்மையாக கருதியதற்கு பல சான்றுகள் உள்ளன."திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து... என்ற நெடுநல்வாடை பாடலில் "ஆடு தலையாக" என்பது மேஷத்தின் சின்னமான ஆடு, தலையான (முதல்) ராசி என பொருள்.இந்த ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நுாலில் விளக்கம் கொடுத்துள்ளார் முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நுாலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்...! பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமில் வேங்கை பூ பூக்கும் காலமாக "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை""முதல் நாளில் பூத்த பொன்னை போன்ற வேங்கை மலர்" என்ற வரிகளை குறிப்பிடுகிறார். சித்திரையில் தான் வேங்கை பூக்கும். இங்கு தலைநாள் என்பது சித்திரையை குறிப்பிடுகிறது.
அகத்தியர் சொன்னது: 12 ம் நுாற்றாண்டிற்கு முன்பாக எழுதப்பட்ட அகத்தியர் பன்னீராயிரம் என்னும் நுாலில்,"மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு மேலானா யசுவினி முதலாம்பாதம் குலவியே கதிரவந்தான் வந்துதிக்க வருச புருசன் அவதரிப்பானென்றே பரிவுடன் உலகிற்கு நீசாற்றே"என குறிப்பிடப்படுகிறது.அதாவது, மேட(மேஷ) ராசியில் அசுவினி முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாளில் வருசபுருஷன் அவதரிப்பான். சித்திரை முதல் தேதியே அவ்வருடப்பிறப்பாகும் என்பது பாடலின் பொருள்.....!15 ம் நுாற்றாண்டில் திருவாரூரைச் சேர்ந்த கமலை ஞானப்பிரகாசம் என்ற அறிஞர் எழுதிய புட்பவிதி என்ற நுாலில் தெய்வங்களுக்கு உகந்த பூக்களின் பட்டியலை பதிவிடும்போது,சித்திரையை முதலாகக் கொள்க சிறந்தொரு மாத புட்பம்" என்கிறார்.அதாவது சித்திரைதான் முதல் மாதம் என்று தெளிவாகவேச் சொல்கிறார்.
சீவக சிந்தாமணி: கோடை காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளதுசீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது."தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
போர்த்துக்கீசியர்: 1310 ல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நுாலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் திருக்கோணேச்சரம், 1796ல் சித்திரை மாதத்தை தமிழர் புத்தாண்டாக கொண்டாடியது பற்றிய தகவல்களை போர்ச்சுகீசியர்களின் குறிப்புகள் தருகின்றன....!இஷ்வாகு மன்னர்களின் கி.பி., 3, 4ஆம் நுாற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநுால் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்......!
பெயர்களே காரணமா: இறுதியாக இவர்கள் சித்திரையை ஏற்க மறுப்பதற்கு காரணம் 60 வருடங்களின் பெயர்களாகும். ஆனால் சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவர்கள் இந்த 60 வருடப்பெயர் மாற்றத்திற்கு மேற்கோளிடும் நுாலான அபிதான சிந்தாமணி என்பது அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, புராணப் புத்தகமும் அல்ல. முக்கியமாக இந்துக்களின் நுாலும் அல்ல.அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி., 12 -ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட நிகண்டு வகையிலான ஓர் அகராதி....!ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது.
அபிதான சிந்தாமணி: அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர். மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது...! அபிதான சிந்தாமணி 1910 ல் முதல் பதிப்பாக ஆ.சிங்காரவேலு முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. அதில் இக்கதை இல்லை. அவரது மகனால் 1934 ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டது. அப்பதிப்பில் இக்கதை சேர்ந்தது. 17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த தேவி பாகவதம், நாரதர் புராணம் என்ற நுால்களில் இருந்த கதை என்று குறிப்பிட்டார்கள்..!அதாவது 17 ம் நுாற்றாண்டுக்குப் பின்தான் இக்கதை எழுதப்படுகிறது. அது 1934 இல் தான் அனைவருக்கும் சொல்லப்படுகிறது. ஆக இந்துக்கள் இந்நுாலை ஒரு பொருட்டாக எடுக்கத் தேவையில்லை...!
பெயர் ஆதாரங்கள்: ஆனால் இந்த ஆண்டுப் பெயர்களை பயன்படுத்தியுள்ள வரலாற்று சான்றுகள் பல உள்ளன.கி.பி., 5 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கணிதவியல், வானியல், ஜோதிட அறிஞரான வராகமிகிரர் எழுதிய பிருகத் ஜாதகம் என்னும் நுாலில் இந்த 60 ஆண்டு விபரங்கள் உள்ளன. புலிப்பாணி ஜோதிடம், இடைக்காட்டு சித்தர் எழுதிய நுாலிலும் 60 ஆண்டுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பாண்டியர், கொங்கு, சோழர் கல்வெட்டுகளிலும் தமிழ் ஆண்டுகள் உள்ளன.இன்றைய கர்நாடாக மாநிலத்தில் 1012 ஆம் ஆண்டு ராஜராஜனின் கல்வெட்டு உள்ளது.அதில் "சகம் 834 பரிதாபி வருடம்" உத்ராயண சங்கராந்தி நாள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.இதன்படி பிரபவ முதல் அட்சய வரை உள்ள தமிழ் வருடக் கணக்கு சோழர் காலத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளது.எனவே தமிழ் புத்தாண்டை மாற்றுவது எந்த அடிப்படையும் இல்லாத செயல். அதற்கு ஆண்டுகளின் பெயர்களை காரணமாக கூறுவது நம்மை ஏமாற்றுவதே தவிர வேறு எதுவும் இல்லை. - இந்துவன்-