பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோவிலில் ஆனி தெப்ப உற்சவம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், தென்திருப்பதி என்று அழைக்கப்படும் சிறப்பு பெற்ற கோவிலுமான, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆனி தெப்ப உற்சவம் ஹரித்ரா நதியில் வெகுவிமர்சையாக நடந்தது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தெப்ப உற்சவம் ஒன்றும், ஆனி மாதத்தில் தெப்ப உற்சவம் ஒன்றும் நடப்பதும் வழக்கம். இதன்படி, ஆனி தெப்ப உற்சவத்தையொட்டி ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்த பின்னர், ருக்குமணி, சத்யபாமா சமேதமாக நான்கு வீதிகளில் புறப்பாடு செய்து, நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில் தெப்பத்தில் தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தெப்பத்தில் தோன்றிய ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமி, ஹரித்ரா நதியை மூன்று முறை வலம் வந்த பின்னர் மைய மண்டபம் சென்றடைந்து, அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்றுக்காலை ஆறு மணியளவில் கோவிலுக்கு ஸ்வாமி ஊர்வலம் சென்று, விழா நிறைவடைந்தது.