பதிவு செய்த நாள்
08
டிச
2021
03:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னகானப்பள்ளி யோகராஜ் என்பவரின் நிலத்தில், மூன்றடி உயரம், ஒன்னரை அடி அகலம் கொண்ட சூலம் செதுக்கப்பட்ட கல் இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் சதானந்தகிருஷ்ணன், பிரகாஷ் ஆகியோர் தகவலின்படி, மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வுக்குழு அங்கு ஆய்வு மேற்கொண்டது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: மாவட்டத்தில் முதலில் கண்டறியப்பட்ட, 300 ஆண்டுகள் பழமையான கல்லில் சூலம் பொறித்த எல்லைக்கல் இது. முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில், நில எல்லைக்கற்கள் நடப்பட்டதை இது கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்திலும் இது பின்பற்றப்பட்டு, மக்களிடம் விவசாய நிலங்கள் பெறப்பட்டு, அவை அருகே உள்ள கோவில்களுக்கு வரிநீக்கப்பட்ட தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய், கோவிலின் தினசரி வழிபாட்டு செலவுக்கு பயன்படுத்தினர் என்பது கல்வெட்டுகளில் தெரிகிறது. இதற்கு, 2 கி.மீ., தள்ளி மற்றோர் சூல கல்வெட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். வரலாற்று குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.