பதிவு செய்த நாள்
09
டிச
2021
01:12
இசை விழாவும், சென்னையும் இணைபிரியாதவை. கடந்த ஆண்டு கொரானாவின் பாதிப்பும், வீரியமும் அதிகமாகவே இருந்தது. ஆயினும், மனித சக்தி தன் புத்தியை பயன்படுத்தி, விருச்சுவல் எனப்படும் மெய்நிகர் முறைப்படி மார்கழி மாத கச்சேரிகளை நடத்தி, ரசிகர்களின் இசை தாகத்தை தீர்த்து வைத்தது.அரசின் தொடர் நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, சென்னையில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.இதன் காரணமாக, கொரோனா அச்சம் குறைந்துள்ளதால், இந்த ஆண்டு, பல சபாக்கள் நேரடி கச்சேரிகள் நடத்த திட்டமிட்டுள்ளன.
ஒருபுறம், ரசிகர்களை நேரில் சந்தித்து தங்கள் திறமையை வெளிப்படுத்த துடிக்கும் இசைக்கலைஞர்கள், நீண்ட இடைவெ ளிக்குப் பின், தங்கள் உள்ளம் கவர்ந்த கலைஞர்களின் குரலில் ஒலிக்கும் கச்சேரிகளை, சபாக்களில் நேரடியாக சென்று ரசிக்க துடிக்கும் இசை ஆர்வலர்கள்.மார்கழி பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சில சபாக்களில் இப்போதே கச்சேரிகள் களைகட்ட துவங்கிவிட்டன. இந்த ஆண்டு டிசம்பர் சீசனுக்கு சபாக்கள் எவ்வகையில் தயாராகியுள்ளன என்பது குறித்த முன்னோட்டம்.பைன் ஆர்ட்ஸ் கிளப் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் ஒரு பாரம்பரியம் மிக்க சபா.
இங்கு, டிச., 17 முதல் அடுத்த ஆண்டு ஜன., 1 வரை கச்சேரிகள் நடைபெற உள்ளன. இங்கு, இந்த ஆண்டு, நேரடியாக கச்சேரிகள் நடைபெறவுள்ளன.சபா நிர்வாகம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வழக்கமாக, தினமும், 4 - 5 கச்சேரிகள் நடந்த நிலையில், இந்த ஆண்டு, பாதுகாப்பு காரணங்கள் கருதி, இரண்டு கச்சேரிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளது.நீண்ட இடைவெளிக்குப் பின், இந்த சபாவில், நேரடியாக கச்சேரிகள் நடக்க உள்ளதால், இசைப்பிரியர்கள் ஆர்வமுடன் இருப்பதாக, கச்சேரி நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி எனும் ஸ்தாபனம், 1932 முதல் இயங்கி வருகிறது. தியாகராய நகரில் உள்ள பாலமந்திர் ஜெர்மன் ஹாலில் நடந்து கொண்டிருந்த அவர்களது கச்சேரிகள் யாவும், இப்போது டி.டி.கே., சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படுகின்றன. இந்த முறை, டிச., 20 - 31 வரை சீனியர், ஜூனியர் என்ற இரு பிரிவுகளில், தினமும் மதியம், 2.30 மணி மற்றும் 4:00 மணி மற்றும் 6:00 மணி என்ற நேரங்களில் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
இங்கு நடக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் அனுமதி இலவசம். அனைவரும் எவ்வித கட்டணமும் இன்றி, நேரில் சென்று இசையை ரசிக்கலாம். அதே போல், நேரடி கச்சேரிகளில் பாட, வாசிக்க இடம் கிடைக்காத கலைஞர்களுக்காக, ஆன்லைன் மேடையையும் உருவாக்கி தந்துள்ளது இந்த சபா.மொத்தத்தில், இந்த டிசம்பரில் நேரடி கச்சேரி நடத்தி, அதில் கட்டணம் வசூலிக்காமல், அனைவருக்கும் இலவசம் என்ற சலுகை வழங்கிய இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் செயல், இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மியூசிக் அகாடமிசென்னையின் பாரம்பரியமிக்க சபாக்களில் ஒன்று மியூசிக் அகாடமி. இங்கு இந்த ஆண்டும் மெய்நிகர் கச்சேரியே. டிச., 20 முதல் 31 வரை கச்சேரிகள் ஒலி, ஒளிபரப்பாகும்.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன், கச்சேரியை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
அகாதமியின் வழக்கமான முறைப்படி நாகசுவரத்துடன் துவக்கம். கலைஞர்கள், புகழ்மிக்க காசிம் மற்றும் பாபு. தவிலில் இணைபவர்கள் ராஜன் மற்றும் விஜயகுமார்.ஒவ்வொரு நாளும் முதல் இரண்டு கச்சேரிகளை, இளைய வித்வான்கள் மற்றும் அதற்கடுத்த நிலையில் உள்ளவர்கள் வழங்குவர். அவற்றை அந்தந்த தேதிகளிலும், பின்னரும் அகாதமியின் யுடியூப்பில் இலவசமாக ரசிக்கலாம்.இதற்குப் பின்னர் வரும் கச்சேரிகள் இரண்டிற்கும், அதாவது மாலை 5.45 மணி மற்றும் 7.30 மணி, இரண்டுமே தேர்ந்த வித்வான்கள் அளிக்கும் நிகழ்ச்சிகள். இவையிரண்டுமே கட்டணத்திற்குட்பட்டவை.சென்ற ஆண்டு நடத்திய ஆன்லைன் கச்சேரி அனுபவம், பெரும்பான்மையான இசை ரசிகர்களுக்கு திருப்தியளித்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆண்டும் களம் இறங்குகிறது,
95 ஆண்டுகளாக தொடர்ந்து கச்சேரிகளை நடத்திவரும் இந்த ஸ்தாபனம். முத்ரா அன்றிலிருந்து இன்று வரை தனக்கென தனி முத்திரை பதித்து வரும் முத்ரா டிசம்பர் மாதம் முழுதும் இசைக் கச்சேரிகளை நடத்தி, அதை ஆன்லைனில் ஒளிபரப்பு செய்கிறது.மொத்தம் 150 கலைஞர்கள் பங்கேற்கும் கச்சேரிகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கவாத்திய கலைஞர்கள் இடம் பெறுவர். பலருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முத்ரா நிர்வாகிகள் தெரிவித்துஉள்ளனர். அதிநவீன தொழில்நுட்ப வசதி உடைய ஸ்டூடியோ உள்ளதால், கச்சேரிகளை மிகத்துல்லியமாக பதிவு செய்து, அதை ஆன்லைனில் ஒளிபரப்பு செய்வது இவர்களின் சிறப்பம்சமாக உள்ளது. வழக்கம் போல ஒரு நாளைக்கு ஒரு கச்சேரி, அதுவும் இரண்டரை மணி நேர அவகாசத்துடன் நிறைவு தருவதாக நமக்கு தருகிறார்கள்.தென்னகத்து தியாகராஜர் என அனைவராலும் அழைக்கப்பட்ட பாபநாசம் சிவனின் புதல்வி ருக்மணி ரமணி அவர்களுக்கு முத்ராவின் விருது அளிக்கப்பட்டது. நாரதகான சபாபாரம்பரியமிக்க நாரதகான சபா, இந்த ஆண்டு, டிசம்பர் 24 - 31 வரை நேரடி கச்சேரிகளையும், ஆன்லைன் கச்சேரிகளையும் ஒருங்கே நடத்த திட்டமிட்டுள்ளது. இங்கு, சுமார் 70க்கும் மேலான நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த முறையும் நிகழ்வுகளை மேற்பார்வையிட்டு நடத்த கலாகேந்திரா மட்டுமின்றி, எம்.டி.எம்.டி., மற்றும் எப்போ எனப்படும் இரண்டு அமைப்புகளின் சேவை உபயோகப்படுத்தப்பட உள்ளது. பிரபல இசைக்கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, உன்னிகிருஷ்ணன், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா, சித் ஸ்ரீராம் போன்றோரின் இசையை இந்த சபாவின் கச்சேரிகளில் கேட்டு மகிழலாம். தமிழிசை சங்கம் பிராட்வே பஸ் நிறுத்தத்தை அடுத்திருக்கும் தமிழிசைச் சங்கம், தன், 79வது இசை விழாவையொட்டி, டிச., 21 - 27 வரை ஏழு நாட்களுக்கு, நேரடி கச்சேரிகளை நடத்த உள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு கச்சேரி என்ற வகையில் திட்டமிட்டுள்ளனர். இங்கும் பல வித்வான்களின் இசை ஒலிக்க உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மார்கழி இசை திருவிழாவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மொத்தத்தில், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் முடங்கிய சபாக்கள், இந்த ஆண்டு மீண்டெழ தயாராகியுள்ளன. இசைக்கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை தர களம் இறங்கியுள்ளனர்.ரசிகர்களின் ஆதரவு மட்டுமே இசையையும், கலைஞர்களையும், கச்சேரிகளை நடத்தும் சபாக்களையும் தொடர்ந்து இயங்க வைக்கும் என, சபா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டு மார்கழி இசை விழா மிக உற்சாகத்துடன், இனிமையாகவும் அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.