சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்: நீலிமலைப்பாதையில் பக்தர்கள் தங்க அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2021 03:12
சபரிமலை: சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. நாளை அதிகாலை முதல் நீலிமலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு சபரிமலை பயணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பாரம்பரியமான நீலிமலை பாதை மூடப்பட்டு சுவாமி ஐயப்பன் ரோடு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக நிலக்கல் திரும்பி விட வேண்டும். இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. நீலிமலை பாதையை திறக்காவிடில் மார்கழி ஒன்றாம் அந்த வழியாக சபரிமலைக்கு செல்ல போவதாக இந்து அமைப்புகள் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேவசம் அமைச்சர் கே ராதாகிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பின்னர் நேற்று இரவு கூடுதல் தளர்வுகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியது.
இதுகுறித்து பத்தணந்திட்டை கலெக்டர் திவ்யா அய்யர் நிருபர்களிடம் கூறியதாவது: பம்பையில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவேணி முதல் நடைப்பாலம் வரை உள்ள 150 மீட்டரை தவிர்த்து நடைபாலத்தின் மறுபாகம் 170 மீட்டர் துாரத்தில் பக்தர்கள் குளிக்கலாம். இதற்காக விபத்துகளை எதிர்கொள்ளும் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கள் ஏற்பட்டால் பம்பை குளியல் நிறுத்தி வைக்கப்படும். நீலிமலை, அப்பாச்சிமேடு வழியிலான பாதையில் நாளை அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இந்த பாதை மற்றும் சுவாமி ஐயப்பன் ரோடு வழியாகவும் செல்லலாம். நீலிமலை பாதையில் இரண்டு இதய நோய் மருத்துவமனை மற்றும் ஆக்சிஜன் பார்லர்கள் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சன்னிதானத்தில் அதிக பட்சம் 12 மணி நேரம் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 500 அறைகள் கோவிட் கட்டுப்பாடுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பக்தர்கள் அறை எடுத்து தங்கலாம். எனினும் பக்தர்கள் திறந்த வெளியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.