பதிவு செய்த நாள்
11
டிச
2021
05:12
பல்லடம்: பல்லடம் அருகே, 17ம் நூற்றாண்டின் நடப்பட்ட நடுகல்லை, தலைவலி தீர்வதற்காக கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில், சோமனூர் - அய்யன்கோவில் செல்லும் ரோட்டில், நடுகல் ஒன்று உள்ளது. தலைவலிக்கு தீர்வு கிடைக்க இந்த நடுகல்லை வழிபட்டு வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், திருவாசி அமைப்புடன் உள்ள இச்சிலை தெய்வ வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட நடுகல் ஆகும். வலது கையில் வாளும், இடது கையில் கட்டாரியும் இருப்பதால், இது ஒரு பெரு வீரரின் சிலை என்பதை உணர்த்துகிறது. பரந்த மார்பும், அகன்ற தோளும் சிலை மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதில் தொங்கட்டான்களும், கைகளில் வளையல்கள், மார்பில் அணிகலன்கள் இருப்பதை நோக்கினால் இவரது செல்வநிலை புலப்படுகிறது. இவர் இப்பகுதியில் குறுநில தலைவராக இருந்து இருக்கலாம். வலது புறம் பெரிய கொண்டையுடன் கூடிய தலை அலங்காரம் இருப்பதால், 16 - 17ம் நூற்றாண்டு நாயக்கர் ஆட்சிக்காலத்தை தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. வலது கையில் வாலுக்கு மேல்பகுதியில் கிளி காட்டப்பட்டுள்ளது. வீரரின் இருபுறமும் வாழை மரங்கள் குலையுடன் காட்சி தருகின்றன. தென்னை ஓலையின் கீற்றுகளில் அலங்கார தொங்கல்கள் போலவும், வாழைக்குலை அருகே காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இவரை பாட்டையயப்பன் என்ற பெயரில் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்றார். கிராம மக்கள் கூறுகையில், பாட்டையப்பன் என்ற பெயருடன் முன்னோர்கள் வழியில் வழிபட்டு வருகிறோம். ஒற்றைத் தலைவலி, மற்றும் தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் குணமடைவதாக நம்பிக்கை உள்ளது என்றனர்.