மீனாட்சி அம்மன் கோயிலில் 2 டோஸ் தடுப்பூசி அறிவிப்பு வாபஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2021 07:12
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்திற்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கோயில் நிர்வாகம் வாபஸ் பெற்று கொண்டது. நாளை(டிச.,13) முதல் வழக்கம் போல், தரிசனம் செய்யலாம் என மதுரை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகமாக இருந்தது. இதனால் நாட்டில் உயரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் இருந்தது. கோவிட் பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மாநில மத்திய அரசுகள் எடுத்து வந்தன. மத்திய, மாநில அரசுகளின் சிறந்த நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
தற்போது கோவிட் தொற்று குறைந்து வரும் வேளையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கோவிட்டின் புதிய வகை வைரஸான ஒமைக்ரான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. எனவே மூன்றாம் அலையை கட்டுப்படுத்தவும், டெல்டா மற்றும் ஒமைக்ரான் கோவிட் மேலும் பரவாமல் தடுக்கவும் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை கமிஷனர் குமரதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாளை(டிச.,13) முதல் இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் மூலம் வெளியிட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுகிறது. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.