பதிவு செய்த நாள்
13
டிச
2021
06:12
அன்னூர்: தேரோட்டத்திற்கு அனுமதி தரும்படி, அமைச்சரிடம், பக்தர்கள் நேரில் மனு அளித்தனர். அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு தேர்த் திருவிழாவில், கடந்த, 10ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் கொரோனா காரணமாக, தேரோட்டத்திற்கு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் திருமுருகன் அருள்நெறி கழகத்தினர், நேற்று, முன்தினம், கோவையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, கொடியேற்றம் நடத்திய பிறகு தேரோட்டம் நடத்தாமல் விடுவது சரியல்ல. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளி விட்டு, எங்கும் நிறுத்தாமல், ஒரு மணி நேரத்தில் தேரோட்டத்தை முடித்துக் கொள்கிறோம். தேரோட்டம் நடைபெறாவிட்டால், பக்தர்கள் மனம் புண்படும். இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது, தேரோட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். மனுவை பெற்ற, அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பக்தர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திலும், தேரோட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தனர்.