ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், தீயணைப்புத் துறை சார்பில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ளது. பவானியம்மன் கோவில். இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வர். இங்கு, ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.பக்தர்கள் வருகை அதிகரிப்பை ஒட்டி, அவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்ச்சி முகாம் நடந்தது. தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி செந்தில்குமரன் தலைமையில், எட்டு பேர் கொண்ட குழுவினர், தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் செய்து காட்டினர்.தீ விபத்து ஏற்பட்டால் அவர்களை எப்படி மீட்பது, தீக்காயங்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி ஆகியவற்றை விளக்கினர். இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.