பதிவு செய்த நாள்
14
டிச
2021
11:12
சோளிங்கர் : தமிழகத்தில் ஆறு மாதங்களில், 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமையும் இடத்தில், 11 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. பணிகளை துவக்கி வைத்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: தமிழகத்தில் வரும் ஏழு மாதங்களுக்குள், 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆறு மாதங்களில், 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற 47 கோவில்களுக்கு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கோவில்களுக்கு பஸ் வசதி, கழிவறை, மடப்பள்ளி, ரோப்கார் மற்றும் மலைப் பாதையில் உள்ள கோவில்களுக்கு மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.திருச்செந்துார் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், 300 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். சோளிங்கர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு, 53 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஆறு மாதங்களுக்குள், ரோப்கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கபாலீஸ்வரர் கலைக் கல்லுாரியில் இந்தாண்டு, 240 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.