பதிவு செய்த நாள்
14
டிச
2021
02:12
தமிழகத்தில் காவல் தெய்வங்களுக்கு ஊர்கள் தோறும் பல்வேறு பெயர்களில் கோயில்கள் அமைந்துள்ளன. ஆனால் நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரதான காவல் தெய்வமாக வணங்கப்படுவது சுடலைமாட சுவாமிதான். தென்மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் சுடலை கோயில்கள் இருப்பினும், திசையன்விளை வடக்குத்தெருவில் அமைந்துள்ள சில நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட, சுடலை ஆண்டவர் கோயில் எல்லாவகையிலும் முற்றிலும் மாறுபட்டது. தற்போது பெரும்பாலான சுடலைமாடசுவாமி கோயில்கள் சுடலை ஆண்டவர் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த பெயர் முதன் முதலாக சுவாமி உத்தரவு படி சூட்டப்பட்ட முதன்மை கோயில் இதுவே ஆகும்.
பொதுவாக எல்லா ஊர்களிலும் அம்மன் கோயில் ஒன்று ஊரின் பிரதான கோயிலாகவும், அக்கோயிலின் வெளியிலோ, அல்லது அக்கோயிலுக்கு இணை கோயிலாகவோ தான், சுடலைமாட சுவாமி கோயில் இருப்பதுண்டு. ஆனால் திசையன்விளை வடக்குதெருவில் உள்ள 1500க்கும் மேற்பட்ட வரிதாரர்களும் இந்த சுடலை ஆண்டவர் கோயிலை மட்டும் தான் பிரதான கோயிலாக கருதி வழிபாடு செய்து வருவது இதன் தனி சிறப்பாகும். சத்திய வாக்கு அடிப்படையில், பிடிமண் எதுவும் இன்றி, சுயமாக தோன்றியது இக்கோயிலாகும். இங்குள்ள கிணற்று நீரிலேயே இக்கோயிலுக்கு தீபம் ஏற்றப்பட்டுள்ள வரலாற்று உண்மை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட கொடைவிழாவில் இங்கு தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்தி பரவசம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இக்கோயில் விழாவில் ஒருவர் மட்டுமே ஆராதனை வந்து ஆடி, அருள் வாக்கு கூறி திருநீறு வழங்குவார். அம்மையும் நானே அப்பனும் நானே என்ற தத்துவத்தை எடுத்து கூறும் வகையில், கொடைவிழாவின் பிரதான நாளில் விரதம் இருந்த சிறுமிகள், மற்றும் பெண்கள் பவனியாக கொண்டு வரும் மஞ்சளை கொண்டு வைக்கப்படும், மஞ்சள் பானையை சுவாமி குளிக்கும் அழகு மெய்சிலிர்க்க வைப்பதாகும். துாக்கி வீசப்படும் முட்டை பந்து போல் குதித்து வரும், சுவாமி முட்டை விளையாட்டும் இங்குள்ள தனி சிறப்பாகும். இக்கோயிலில் அனைத்து கலை நிகழ்ச்சிகளோடு கூடுதலாக இலவச கண்சிகிச்சை மற்றும் மருத்துவ முகாம்களும், ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த கோயிலின் 80 வயது மூத்த நிர்வாகி ஒருவர், சுவாமி அருளாடி வரும்போது, எனக்கு கண்ணொளி தாப்பா என்று கேட்டாராம், அன்று இரவே சுவாமி அவரது கனவில் தோன்றி, நான் கைலையில் நோய் தீர்க்கும் வரம் வாங்கி வந்தவன், உனக்கு மட்டுமல்ல என் கோயில் விழாவிற்கு வரும் எல்லோருக்கும் நானே மருத்துவனாக வந்து நோய்களை தீர்ப்பேன் என்றாராம். அன்று முதல் தான் இக்கோயில் விழாவில் மருத்துவ முகாம்கள் நடத்தபடுவதாக கூறுகின்றனர்.
இங்கு 41 நாட்கள் சுவாமி காலடியில் வைத்து பூஜிக்கப்பட்டு வழங்கப்படும் பச்சைகயிற்றை பக்தர்கள் பயபக்தியுடன் வலது கையில் அணிந்து கொள்கின்றனர். மதிய கொடை விழாவின் போது சுவாமி வீசி எறியும் பழம் கிடைத்த, குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு அவ்வாண்டே குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள், சுவாமியை வேண்டி, அம்மனுக்கு அணிவித்த பட்டு சேலையை பெண்பார்க்க வரும் போது அணிந்து கொண்டால் உடனே வரன் அமையும் என்பதும் நீண்ட காலமாக இங்கு தொடர்ந்து வரும் நம்பிக்கைகள் ஆகும். ஒரு காலத்தில் ஏழ்மை நிலையில் பனை மரம் ஏறும் தொழிலாளியாக இருந்த இப்பகுதி மக்கள், பணம் படைத்த செல்வந்தர்களாக மாற இந்த சுடலைஆண்டவர் வழிபாடு தான் காரணம் என இவ்வட்டார பகுதி மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை உள்ளதால், இந்த சுவாமியை வடக்குத்தெரு மஹாராஜா என்றே அழைக்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் ஞாயிறு துவங்கி வெள்ளி வரை 6 நாட்கள் ஆவணி பெருங்கொடை விழாவும், மற்றும் அனைத்து விசேஷ தினங்களிலும் சிறப்பு பூஜையும், தினமும் இரவு 7.30 மணிக்கு பூஜையும் நடந்து வருகின்றது. கோயில் தொடர்பாக நிர்வாகி சேம்பர் செல்வராஜ் 9442610646 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். -எஸ்.ஏ.பொன்சேகரன்