செந்துறை: செந்துறை அருகே பெரியூர்பட்டி காமாட்சிபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நத்தம் யூனியன் செந்துறை அருகே உள்ள பெரியூர்பட்டி காமாட்சிபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நவம்பர் 25 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல், காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனையொட்டி முதல்நாள் லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, சதுர்வேதம், யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் மண்டப சாந்தி மற்றும் கோ பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் காசி,ராமேஸ்வரம், கரந்தமலை,அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் பூஜைகளுக்குப் பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமடித்தார். பின்னர் கலசத்தில் உள்ள புனித தீர்த்தங்கள் கும்பத்தில் ஊற்றப்பட்டன. இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம், மாவட்ட கவுன்சிலர் விஜயன் மற்றும் ஊர் பொதுமக்களும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் ஊர் பட்டக்காரர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியூர்பட்டி, காமாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.