பதிவு செய்த நாள்
16
டிச
2021
10:12
கோவை : மார்கழி மாத பிறப்பையொட்டி, அதிகாலை கோவில்கள் திறக்கப்பட்டது. மார்கழி மாதபிறப்பையொட்டி உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசபெருமாள் கோவிலில் சுவாமி நம்பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் சேவை சாதித்தார்.
ஆண்டாள் அருளிய திருப்பாவை, மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை பாராயணம் செய்வதோடு, நாமசங்கீர்த்தன உற்சவம் இன்று துவங்கி, இம்மாதம் முழுக்க தொடர்கிறது. தமிழ் மாதங்களில் முக்கியமானது தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி; மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் இம்மாதத்தில், ஆன்மிகத்தை பின்பற்றும் அனைவரும் அதிகாலை எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில், பகலை உத்ராயணமாகவும், இரவை தட்சிணாயனமாகவும் அழைப்பர். மார்கழி மாதம் என்பது தேவலோகத்தில் விடியற்காலையாகவும், பிரம்ம முகூர்த்தம், உஷத்காலம் என்கிறோம். அதனால், மார்கழியில் அதிகாலை எழுந்து நீராடி இறைவனை வணங்கினால், நல்ஆரோக்யத்துடன், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, தேவர்கள் ஆசிர்வதிப்பர் என்பது நம்பிக்கை. அறிவியல் படி, மார்கழியில் ஓசோன் படலம், பூமிக்கு மிக அருகாமையில் காலை, 4:30 மணியில் இருந்து, 6:30 மணி வரை உள்ளது. ஓசோனை சுவாசித்தால் உடல்நலனுக்கு நல்லது என்ற காரணத்தால் பெண்கள் காலையில் கோலம் போடவும், ஆண்கள் நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டனர்.
மார்கழியின் பெருமையை ஆண்டாள், மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்ற திருப்பாவையில் விளக்குகிறார். மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், போற்றியாம் மார்கழி நீராடலோர் என்று பாடியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க மார்கழி பிறப்பை ஒட்டி, கோவில்கள் இன்று அதிகாலை திறக்கப்படுகின்றன. திருப்பாவை, திருவெம்பாவை பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறது. நாமசங்கீர்த்தனம், உச்சவிருத்தி பஜனை சமூக இடைவெளியோடு நடைபெறுகிறது. பெண்கள் தண்ணீர் குடம் சுமந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பாவை நோன்பை நோற்பர். ராம்நகர் கோதண்டராமர் கோவில், சலிவன் வீதியில் உள்ள வேணுகோபாலசுவாமி, பெரிய கடை வீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிது.