சதுரகிரியில் பிரதோஷ வழிபாட்டிற்கு அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2021 05:12
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. கடந்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது மழை ஓய்ந்த நிலையில் நேற்று மார்கழி மாத பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 7:00 மணிக்கு உடல் வெப்ப சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணிவரை சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து திரும்பினர். மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாடு துவங்கியது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விசுவநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.