பழநி: பழநி, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வேல் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட வேல் அமைப்பு மர்ம நபரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி, பஸ் ஸ்டாண்ட் அருகே கிரானைட் கற்களால் வேல் மற்றும் மயில் வடிவங்கள் ரவுண்டானாக்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வேல் ரவுண்டானா, மயில் ரவுண்டானா என அழைக்கப்படுகிறது. தினமும் அருகில் உள்ள பூக்கடைக்காரர்கள் வேல் மற்றும் மயில் வடிவதிற்கு மாலை அணிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு, புது தாராபுரம் ரோடு, காந்திமார்க்கெட் ரோடு சந்திப்பில் உள்ள வேல் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட வேல் அமைப்பை மர்ம நபர் ஒருவர் உடைத்தார். அவர் சூழ்ந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை தாக்கினர். இதை அறிந்த போலீசார் வேலை உடைத்த நபரை பிடித்துச் சென்றனர். இதனால் ஹிந்து அமைப்புகள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் அப்பகுதியில் வேல் அமைப்பை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.