பதிவு செய்த நாள்
16
டிச
2021
06:12
மதுரை:கிராமக் கோவில் பூஜாரிகளின் மாத ஊக்க தொகை, குறைந்தபட்சம் 5,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துகிராமக் கோவில் பூஜாரிகள் மதுரை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்,கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் மதுரை மாவட்ட முதல் மாநாடு, கருமாத்துாரில் சமீபத்தில் நடந்தது. தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.
தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் நிறுவனரும், கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான எஸ். வேதாந்தம் பேசியதாவது:மதமாற்றம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்துக்களின் சதவீதம் 79 சதவீதமாக குறைந்து விட்டது. 21 சதவீதத்தினர் மாற்று மதம் சென்றுவிட்டனர். மதமாற்றத்தை தடுக்க வேண்டும். தமிழ் கலாசாரம், பண்பாடு வளர, கிராமக் கோவில்கள் தான் காரணம்.
நாட்டின் எல்லையை ராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர். கிராம எல்லைகளை கிராமக் கோயில் பூஜாரிகள் காத்து வருகின்றனர். பூஜாரிகள் மந்திரங்கள் கற்று, அதை பூஜையின்போது கூறினால், மக்கள் மத்தியில் மரியாதை ஏற்படும். அதற்கு பூஜாரிகள் தயாராக வேண்டும். பூஜாரிகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டப்படிப்பும் படிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் கிராமக் கோவில் பூஜாரிகளுக்கு சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
ஆனால், தமிழகத்தில் 2,000 ரூபாயாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஏராளமான கிராமக் கோவில் பூஜாரிகள் கலந்து கொண்டனர்.
மதமாற்ற தடை சட்டம்கொண்டு வர வேண்டும்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* பூஜாரிகளின் ஓய்வூதியத்தை 4,000 ரூபாயாக உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி.
* கிராமக் கோவில் பூஜாரிகளின் மாத ஊக்க தொகை குறைந்தபட்சம் 5,000 ரூபாயாக வேண்டும்.
* அறங்காவலர் குழுவில் பூஜாரிகளையும் இணைக்க வேண்டும்.
* கோவிலுக்கு சொந்தமான இடங்களில் அரசு அலுவலகங்கள், கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், புறம்போக்கு நிலத்தில் உள்ள சிறிய கோவில்களுக்கு அந்த கோவில் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும்.
* கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
* கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும்.
* ஆகம விதி தெரிந்தவர்களையே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
* மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.என்பது உட்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.