பதிவு செய்த நாள்
17
டிச
2021
12:12
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் கைசிகபுராணம் வாசிக்கப்பட்டது. துாத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் முதல் தலமாக திகழும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி விரதமிருந்து துவாதசியன்று கைசிக புராணம் வாசித்தல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாதம் கைசிக புராணம் வாசித்தல் துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் நடத்தப்பட்டது. அந்த வகையில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு மூலவருக்கு பால் திருமஞ்சனம் 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி ,தனித்தாயார்கள் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி ஆகியோருடன் சயனகுறட்டில் எழுந்தருளினார். தொடர்ந்து திருவாராதனம் நடைபெற்று புராண ஏட்டினை சுவாமி பாதத்தில் வைத்து கோயில் ஸ்தலத்தார் ராஜப்பாவெங்கடாச்சாரி கைசிக புராணம் படித்தார். தொடர்ந்து கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . இதில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன் கண்ணன், அர்ச்சகர்கள் வாசு, ராமானுஜம், சீனு, அந்தியாபகர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.