பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
குறிச்சி : சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடையதே சிவன் வழிபாடு, என விஞ்ஞானி கணேசன் பேசினார். ஈச்சனாரியிலுள்ள கற்பகம் பல்கலையில் நடந்த தமிழ் மன்ற துவக்க விழாவுக்கு, பல்கலை வேந்தர் வசந்தகுமார் தலைமை வகித்தார். மாணவர் நிவாஸ்ராஜ் வரவேற்றார். சாகித்ய அகாடமி உறுப்பினரும், பேராசிரியருமான சிற்பி பாலசுப்ரமணியன் அறிமுக உரையாற்றினார். அமெரிக்காவிலுள்ள, ஹூஸ்டன் ஜான்சன் விண் ஆய்வு மைய விஞ்ஞானி கணேசன், "சிந்து சமவெளியில் கொற்றவை - சிவ வழிபாட்டின் தோற்றம், என்ற தலைப்பில் பேசியதாவது: பாரதியார், பாரதிதாசன், ராமானுஜம் போன்றவர்களின் நூல்களை பாதுகாக்க வேண்டும். தமிழில், ஆவணப்படுத்துதல் மிக குறைவாக உள்ளது. ஒட்டக்கூத்தருக்கு, குலோத்துங்கன் காலத்தில்தான் கவிப்பேரரசு பட்டம் கொடுக்கப்பட்டது. தமிழர்கள், திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள். சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடையவர்கள். யானையை, மனிதர்களுடன் இணைத்ததும், சிந்து சமவெளி நாகரிக காலத்தில்தான். கொற்றவை, தலைமைத்தன்மை கொண்ட பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளார்; கண்ணகியை போன்று. தாய் மொழி இலக்கியத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களை அதிகளவு படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை, ஆவணப்படங்கள் மூலம் விளக்கினார். முன்னதாக, கற்பகம் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் பேசினர். தமிழ்த்துறைத் தலைவர் தமிழரசி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.