சபரிமலை: கேரள ஐகோர்ட் உத்தரவின்படி சபரிமலையில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. அரவணை விற்பனை மூலம் 18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனில் தேவசம் போர்டு கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிறப்பு பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு இவ்வாறு நியமிக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பகுதி பேர் பல்வேறு காரணங்களை கூறி பணியில் சேரவில்லை. பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில் இது சிரமங்களை ஏற்படுத்தியது. இது பற்றி கேரள ஹை கோர்ட் நியமித்த சிறப்பு ஆணையர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதன்மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், அஜித் குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், இரண்டு நாட்களுக்குள் 220 தேவசம் போர்டு ஊழியர்களை நிலக்கல்,பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் நியமித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி குறிப்பிட்டிருந்தனர். மேலும் உத்தரவு கிடைத்த பின்னரும் சபரிமலை பணியில் சேராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதைதொடர்ந்து கூடுதல் ஊழியர்களை நியமிக்கும் பணியில் தேவசம்போர்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் 200 தற்காலிக ஊழியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
நடை திறந்து கடந்த 30 நாட்களில் அரவணை விற்பனை மூலம் 18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மிகக்குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்ததால் இதே கால அளவில் அறுவடை விற்பனையில் ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் மட்டுமே கிடைத்திருந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் நெய் யபிஷேகத்துக்கு அனுமதிக்கப் படாததால் அபிஷேகம் செய்த நெய் விற்பனை அதிகமாகியுள்ளது. இதன் மூலம் மட்டும் 44.21 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.