வா வா நடராஜா கோஷத்தோடு சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2021 06:12
சிதம்பரம்: கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களின் போராட்டத்திற்கு பின்பு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘வா வா நடராஜா’ கோஷத்தோடு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது புகழ் மிக்க நடராஜர் கோவில். ஆண்டுக்கு இரு முறை ஆனி மற்றும் மார்கழியில் தரி்சன உற்சவம் நடைபெறுவது வழக்கம். கொரோனா அச்றுத்தல் காரணமாக கடந்த முறை கோவிலுக்குள் தேர் மற்றும் தரிசன விழா நடத்திக்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு ஆருத்ர தரிசன விழா கடந்த 11மே் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினந்தோறும் மூலவரான நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், காலையிலும் மாலையிலும் பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும் நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் தேர் மற்றும் தரிசன விழாவிற்கு அனுமதி அளிக்காததால் பக்தர்கள் கொதித்தெழுந்தனர். நேற்று இரவு கீழவீதியில் மறியல் போராட்டத்தில் இறங்கினர். அதனை தொடர்ந்து தேரோட்டத்திற்கு இரவு 11.30 மணியளவில் அனுமதி வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் இன்று சிறப்பாக நடந்தது. காலை 5 மணிக்கு மூலவராக நடராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு தேருக்கு வந்தடைந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்கு பின் 6.15 க்கு தேர் புறப்பட்டது. தேரோட்டத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘வா வா நடராஜா’ ‘வந்து விடு நடராஜா’ கோஷத்துடன் தேர் இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் சிதம்பரத்தின் தேரோடும் நான்கு வீதிகளில் கோலங்கள் போட்டனர். சிவனடியார்கள் பக்தி பரவசத்தோடு ஆடி மகிழ்ந்தனர். மாலை தேர் நிலையை வந்தடைந்தது நடராஜர் – சிவகாமசுந்தரி இருவரும் நடனம் ஆடியபடி உள்ளே சென்றனர். முக்கிய விழாவான ஆருத்ர தரிசன விழா நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர், காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதியுலா காட்சியும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன நிகழ்வு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.