ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை மங்களநாதர் சிவன் கோயிலில் இன்று காலை மரகத நடராஜருக்கு சந்தனம் களைதல் நடைபெற்றது. நாளை (டிச., 20) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மங்களநாத சுவாமி கோயிலில் டிச.,11ல் காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நாளை (டிச.,20) வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8:00 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனபடி களைதல் நடைபெற்றது. அதன்பின் பக்தர்களுக்கு சந்தனம் பிரசாதம் வழங்கப்பட்டது. 9:00 மணிக்கு மரகத நடராஜருக்குமகா அபிேஷகம் நடைபெற்றது.
இரவு 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் கல்தேர் மண்டபத்தில் எழுருந்தருளுகிறார். இரவு 11:00 மணிக்கு நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிேஷகம் தொடங்குகிறது. நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர்பெருமாள் வீதியுலா, மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு அபிேஷகம், வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.
உள்ளூர் விடுமுறை: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நாளை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய 2022 ஜன.,8 சனிக் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். வெளிமாவட்ட, மாநிலங்களிலிருந்து மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இலவச, கட்டண தரிசன வழிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.