பதிவு செய்த நாள்
19
டிச
2021
07:12
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2022ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேகம், பூஜைகளுக்கான முன்பதிவு துவங்கியது.
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை சாற்றப்படும். நல்லெண்ணெய், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். மதியம், 1:00 மணிக்கு அலங்காரம் செய்யப்படும். தினசரி பூஜைக்காக, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள், முன்கூட்டியே தங்களுக்கு விருப்பமான தேதியில், கட்டளைதாரர்களாக முன்பதிவு செய்து, அபி ேஷகத்தில் பங்கேற்பர். அதன்படி, 2022ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேகம், , சிறப்பு பூஜைகளுக்கான முன்பதிவு இன்று துவங்கியது. நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்தனர்.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது: 2022ம் ஆண்டுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. தற்போது ஒரு நாள் அபிஷேகத்துக்கு, ஐந்து கட்டளைதாரர்கள் வீதம் பதிவு செய்யப்படுகிறது. ஒருவருக்கு தலா, 6,000 வீதம், ஒரு நாள் வடைமாலை மற்றும் அபிஷேகத்துக்கு, ஐந்து பேரிடம் மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பக்தர்கள் தொகையை செலுத்தி, முன்பதிவு செய்து ரசீது பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
சுவாமி அலங்கார கட்டணம்: ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்ய, 3,000 ரூபாய், தங்க கவசம், 5,000, தங்கத்தேர் இழுத்தல், 2,000, வெள்ளி கவசம், 750, நாமகிரி தாயார் தங்க கவசம், 750, நரசிம்மர் திருக்கல்யாணம், 2,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.