சபரிமலையில் பக்தர்களின் நேரடி நெய்யபிஷேகம் தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2021 10:12
சபரிமலை : சபரிமலையில் பக்தர்களின் நேரடி நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை முதல் தொடங்கியது.
கொரோனா கட்டுப்பாடுகளால் மண்டல சீசன் தொடக்கம் முதல் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யை அபிஷேகத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. நெய் தேங்காய்களை இதற்கான கவுண்டர்களில் கொடுத்துவிட்டு அபிஷேகம் செய்த நெய்யை பிரசாதமாக பெற்று சென்றனர்.
பின்னர் இந்த நெய் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. சபரிமலை பயணத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முத்திரை தேங்காய் நெய்யபிஷேகத்தை நேரடியாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்களும், ஹிந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தது. கேரள அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகளில் நெய்யபிஷேகத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த உத்தரவில் காலை 7:00 - மதியம்12:00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நேற்று அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் நெய்யபிஷேகத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று அபிஷேகம் செய்தனர். ஐயப்பனுக்கு அபிஷேகம் நேரடியாக நடத்த அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளித்ததாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.