காட்டு யானை நடமாட்டம்: பம்பை - சன்னிதானம் பாதைகளில் கூடுதல் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2021 01:12
சபரிமலை : பம்பையில் காட்டு யானை தாக்கி வனத்துறை அதிகாரி காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பம்பை சிறியானை வட்டம் அருகே இறங்கிய யானை கூட்டத்தை விரட்ட சென்ற வனத்துறை அதிகாரி மணிக்குட்டன், தப்பி ஓடும் போது பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் நீலிமலை பாதை, சுவாமி ஐயப்பன் ரோட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு படி நள்ளிரவு 2:00 மணிக்கு முதல் செட் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுடன் பம்பையில் இருந்து வனத்துறை ஊழியர்கள் குழுவாக சரல்மேடு வரை செல்கின்றனர். இங்கிருந்து சன்னிதானம் வரை, சன்னிதானத்தில் இருந்து வரும் வனத்துறை குழுவினர் கண்காணிக்கின்றனர்.
மன்னாறகுளத்தி - பம்பை, பிலாப்பள்ளி, கம்பகத்தி வளைவு, செழிக்குழி, சாலக்கயம் இடங்களில் காட்டு யானை அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பம்பை , சன்னிதானத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற யானை பறக்கும் படையினர், பாம்பு பிடிப்பதில் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.