250 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுக்கற்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2021 12:12
சேர்ந்தமரம்: சேர்ந்தமரம் அருகே 250 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ளது வெள்ளாளன்குளம் கிராமம். இங்கு முட்புதர்களுக்கு நடுவில் நடுகற்கள் புதைந்து கிடப்பதை இப்பகுதி மக்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வெள்ளாளன்குளம் வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த தயாளன், புவனேஸ்வரன், முத்தமிழன், செல்வம் நெல்லை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மைய இயக்குனர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் வெள்ளாளன்குளம் கிராமத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளாளன்குளம் கூட்டுறவு கடன் வசதி சங்கத்தின் அருகில் துவங்கி, ௭ நடுகற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடுகற்களின் உயரம் சுமார் 3 அடி உயரம் இருந்தது. ஒரு கல்வெட்டில் ‘சீலனடியான் செட்டி மகள்’ என பழைய கால தமிழ் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எழுத்து 18ம் நூற்றாண்டை சேர்ந்தது, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பாக நடுகற்கள் நடப்பட்டு இருக்க வேண்டும். போரில் மரணமடைந்த வீரர்களுடன், அவர்கள் மனைவி உடன்கட்டை ஏறியதை இந்த நடுகற்கள் புலப்படுத்துகின்றன என ஆய்வு செய்த மதுரை வரலாற்று ஆய்வாளர் சாந்தலிங்கம் தெரிவித்தார். நடுக்கற்களை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.