திருப்புத்தூர் சீதளிகுளத்தில் தெப்பம் வெள்ளோட்டம்: பராமரிப்பு பணிகள் மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2021 01:12
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளமான சீதளிக்குளத்தில் நீர் பெருகியதை அடுத்து புதிய தெப்பத்தை வெள்ளோட்டம் விட பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்ஸவம் நடைபெறும். அதற்காக ஆண்டுதோறும் தற்காலிகமாக தெப்பம் கட்டப்பட்டு சீதளிக்குளத்தில் வலம் வரும். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தேவஸ்தானத்தினர் மற்றும் கார்காத்த வெள்ளாளர் மண்டகபடிதாரர்களும் நிரந்தரமாக தெப்பம் கட்டினர். வேங்கை மரத்தால் ஸ்தபதி சாட்சிநாதன் என்பவர் பீடம், குத்துக்கால், பத்மம் , சின்ன பத்மம், கொடுங்கை, கலசம் என்ற 6 அடுக்கிலான தெப்பத்தை வடிவமைத்தார்.
தெப்பம் அமைக்கப்பட்ட பிறகு சீதளியில் நீர் பெருகாததால் வெள்ளோட்டம் நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் தெப்பக்குளத்தில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. எனவே வெள்ளோட்டம் பார்க்க முடிவானது. அதற்காக தற்போதுள்ள தெப்பத்தை எடைக்குறைக்க பராமரிப்பு பணிகளை ஸ்தபதி பாபனாசம் மணிகண்டன் துவக்கியுள்ளார். கடந்த ஒருவாரமாக நடைபெறும் இந்த பராமரிப்புப் பணியில் தெப்பத்தின் எடையில் 35 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதற்காக தேக்கு மரச்சட்டங்களால் அழகுபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் தேவஸ்தானத்தினர் வெள்ளோட்டம் நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.