பதிவு செய்த நாள்
31
டிச
2021
11:12
துாத்துக்குடி: துாத்துக்குடி பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. நேற்று சுவாமி ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு, மாக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
துாத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. ஜன. 2ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து மார்கழி மாத பூஜை, 9:00 மணிக்கு மேல் மங்கள இசை, திருமஞ்சனம், திருவாராதனம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக தீபாராதனைகள் நடந்தது. மாலையில் முரளிதர சுவாமிகள் பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மாக்காப்பு அலங்காரத்தில், சுவாமி ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளை, தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் செய்தார். இரண்டாம் நாளான இன்று வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும், மூன்றாம் நாளான நாளை ஜன. 1ம் தேதி சந்தனகாப்பு அலங்காரத்திலும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஜன. 2ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், திருவாராதனம், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு புஷ்பாஞ்சலி, ஸ்ரீராமர் ஆராதனம், திருப்பாவாடை, தளிகை பிரசாத வினியோகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.